Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Friday, September 4, 2009

மரண அடி மல்லப்பா

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

ஒரு விளையாட்டாக தான் நான் கமெண்ட் போடவே ஆரம்பித்தேன். பின்னர் அந்த காமிக்ஸ் மேல் உள்ள ஈர்ப்பினால் ஒரு காமிக்ஸ் பற்றிய பிளாக் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுத்தேன். பல மாதங்களாக நினைத்துக் கொண்டே இருந்தேன். எப்படி நம்முடைய பதிவுகளை இடலாம் என்று. பின்னர் இந்த தளத்தையே ஒரு சித்திரங்களுக்கான உறைவிடமாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. தற்போது நண்பர் சாத்தான் அவர்கள் அப்படித்தான் செய்து வருகிறார். அவருக்கு துணையாக ஏதோ நாமும் நம்மால் ஆனதை செய்வோம் என்று துணிந்து களத்தில் குதித்து உள்ளேன். கடவுள் நம்மை கை விட்டாலும், காமிக்ஸ் ரசிகர்கள் கை விட மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்று இந்த புதிய இன்னிங்க்சை ஆரம்பிக்கிறேன்.

ஒரு காலத்தில் வெறும் அட்டைப் படங்களை மட்டுமே ஸ்கான் செய்து பதிவுகளை இட்டுக் கொண்டு இருந்தவர்களை எல்லாம் "காமிக்ஸ் பிளாக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று புது வழிக்கு கொண்டு சென்ற அருமை நண்பர் கிங் விஸ்வா அவர்கள், பல காமிக்ஸ் தளங்கள் தோன்ற காரணமாக இருந்தார். அவருக்கு என்னுடைய இந்த பிளாக்கின் முதல் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, தமிழில் காமிக்ஸ் பிளாக் ஆரம்பிக்க காரணமாக இருந்த காமிக்ஸ் உலகின் முன்னணி நாயகன் டாக்டர் செவன் அவர்களுக்கும் மரியாதையை செலுத்துகிறேன்.

இந்த காமிக்ஸ் பிளாக்கில் நீங்கள் முழு காமிக்ஸ் எதனையும் எதிர்பார்க்க வேண்டாம். இங்கே உங்களுக்கு காணக் கிடைக்காத படங்களும், காமிக்ஸ் பற்றிய குறிப்புகளும், நான் ரசித்த கதைகளும் அதனை சார்ந்த தகவல்களுமே உங்களுக்கு இங்கு கிடைக்கும். அதனால் இதனை ஒரு மொக்கை பிளாக் என்று யாரும் தவிர்த்து விட வேண்டாம். உங்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களும், நீங்கள் இதுவரை கேள்விப் பட்டே இராத காமிக்ஸ் மற்றும் சித்திரக் கதை களஞ்சியங்களை பற்றிய தகவல்களும் உங்களுக்காக இங்கே விருந்தாக படைக்கப் படும்.

முதல் பதிவின் தலைப்பை பார்த்து பலரும் பயந்து பொய் இருக்கலாம். இது என்ன ஒரு கொடுரமான ஒரு கொலைகாரனை பற்றிய கதையா என்று. தலைப்பை பார்க்கும் புதிய வாசகர்கள் யாவருக்கும் அப்படித்தான் தோன்றும். ஆனால் நெடுநாளைய குமுதம் வாசகர்கள் அனைவருக்கும் இந்த பெயர் ஒரு புகழ் பெற்ற பெயராகும்.

தற்போது குமுதம் வாங்குபர்கள் படிக்கும் முதல் விஷயம் எது? (லயன், முத்து காமிக்ஸ் என்றால் எடிட்டரின் ஹாட் லைன் மற்றும் காமிக்ஸ் டைம் என்று கூறலாம்). அனேகமாக அரசு பதில்கள்? ஞானியின் ஒ பக்கங்கள்? சுனிலின் சினிமா பக்கங்கள்? ஆறு வித்தியாசங்கள்? சினிமா விமர்சனம்? யாராலும் மெஜாரிடியாக கூற முடியாத ஒரு விஷயம் (இந்த மெஜாரிட்டி, மைனாரிட்டி விஷயமே நமக்கு வேண்டாம்ப்பா - அதை எல்லாம் அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்வார்கள்).

ஆனால், எழுபதுகளில் அறுபதுகளின் முடிவில் (1968-1969) வந்த குமுதம் இதழ்களில் நானும் என்னுடைய பள்ளி நண்பர்கள் அனைவரும் படிக்கும் முதல் விஷயமே இந்த மரண அடி மல்லாப்பா சீரிஸ் தான். என்ன கொடுமை என்றால் இதனை வரைந்தவர் யார், தொடருக்கு கதையை அமைத்தவர் யார் என்ற விஷயங்கள் எதுவுமே எனக்கு தெரியாது. தெரிந்தவர்கள் அதனை Comment ஆக கூறினால் அகம் மகிழ்வேன்.

 

M A M 1A M A M 1B

மரண அடி மல்லப்பா அந்த அளவுக்கு எங்களின் மனதை கவர்ந்தவன் ஆவான். நம்மில் பலருக்கு சிறு வயதில் அதி மேதை அப்புவை பிடித்து இருக்கும், பலே பாலுவை பிடித்து இருக்கும். அதற்கெல்லாம் காரணம் அவர்கள் யாருமே ஹீரோக்கள் அல்ல. அவர்கள் நம்மைப் போல ஒரு சராசரி சிறுவர்களே என்பது தான். அவர்களும் தோற்பார்கள், அடி வாங்குவார்கள், ஆனால் அவற்றை எல்லாம் எப்படி தாங்கிக் கொண்டு செல்கிறார்கள் என்பதே இந்த கதைகளின் வெற்றிக்கு ரகசிய காரணமாக் அமைந்தது.

 

M A M 2A M A M 2B

இந்த வகையில் பார்த்தால் மரண அடி மல்லப்பா நம்மில் ஒருவராக இருந்ததே எங்களுக்கு இந்த கதை தொடர் பிடிக்க காரணமாக அமைந்தது. என்னதான் அவர் ஒரு மாமிச மலை போல தோற்றம் அளித்தாலும் உள்ளத்தில் அவர் இன்னமும் ஒரு சிறுவர்தான் (நம்முடைய ஷேரிப் டாக் புல் போல) என்பதையே இந்த தொடரில் வந்த கதைகள் அனைத்தும் பறை சாரும். . அதற்க்கு மற்றுமொரு உதாரணம் இதோ:

M A M 3A M A M 3B

இப்படியாக பலரின் மனதை கவர்ந்த மரண அடி மல்லப்பாவின் சாகசங்கள் தொடரும் என்று சொல்லிக் கொண்டு இந்த அறிமுகப் பதிவை முடித்துக் கொள்கிறேன். இது வெறும் அறிமுகப் பதிவு என்பதால் சிறிய அளவிலேயே படங்கள் உள்ளன. அடுத்தடுத்த பதிவில் பல படங்கள் வந்து உங்களின் மனதை கொள்ளை கொள்ளும் என்று உறுதி அளிக்கிறேன்.

நன்றி, வணக்கம்.

பின் குறிப்பு: இந்த தொடரைப் பற்றிய சரியான தகவல்களையும் மேலும் பல அறிய ஸ்கான்'களையும் அளித்து உதவிய "வலை மன்னன்" அவர்களுக்கு நன்றி.

இந்த தொடர் 1968ம ஆண்டு குமுதம் இதழில் ஆரம்பிக்கப் பட்டது. சிறப்பாக சென்ற இந்த தொடர் மரண அடி மல்லப்பாவின் மகன் பிறந்ததும் இன்னமும் பலரால் ரசிக்கப் பட்டது, குறிப்பாக குழந்தைகளும் ரசிக்க ஆரம்பித்தனர். வெகு விரைவில் ஜூனியர் மரண அடி மல்லப்பாவை நம்முடைய பதிவில் கண்டு ரசிக்கலாம்.