அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.
மரண அடி மல்லப்பா பற்றி என்னுடைய அறிமுகப்பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவில் நாம் ஒரு காமிக்ஸ் ஸ்டிரிப் பற்றி இல்லாமல் அந்த காலத்தில் வந்த சில சினிமா விளம்பரங்களை பார்க்கலாம்.
இந்த காலத்திய விளம்பரங்கள் போல இல்லாமல் அந்த காலத்தில் வந்த சினிமா விளம்பரங்கள் மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த முதல் விளம்பரத்தை பாருங்கள். ஐம்பதுகளின் முடிவில் வந்த கல்கி இதழில் வந்த விளம்பரம் இது.
விலாவரியாக வந்த இந்த விளம்பரம் என்னுடைய கருத்தை கவர்ந்த ஒன்றாகும். இந்த விளம்பரத்தை மறுபடியும் பாருங்கள். அதில் எழுதப் பட்டு இருக்கும் வசனங்களை உற்று படியுங்கள். அற்புதமான வசனங்கள். இந்த விளம்பரத்தின் ஸ்கிரிப்ட்'ஐ எழுதியவருக்கு பாராட்டுக்கள். அதனைப் போலவே இந்த படத்தில் நடித்தவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவுமே கொடுக்கப் படவில்லை (ஒருவேளை புது முகங்களோ?).
மற்றுமொரு கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவெனில் லேடி = ஸ்திரி என்றும் ஜென்டில்மேன் = புமான் என்றும் விளிக்கப் பட்டு இருப்பது. ஸ்திரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த புமான் என்ற வார்த்தையை நான் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுகிறேன்.
கடவுளர்களை பற்றி அந்த காலத்தில் வந்த படங்கள் அதிகம் (குறிப்பாக திருவிளையாடல் போன்ற படங்கள்). அதில் நான் இதுவரையில் கேள்விப் படாத படம் இந்த குமார சம்பவம்.
அந்த காலத்தில் எந்த ஸ்டுடியோவில் எடுக்கப் பட்டது என்று குறித்த விவரங்கள் அனைத்து விளம்பரங்களிலும் வந்து கொண்டே இருந்தது. இந்த விளம்பரமும் அதற்க்கு விதி விலக்கல்ல. இந்த விளம்பரத்தில் நட்சத்திர பட்டாளமே இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரமும் இருந்ததை பாருங்கள். ஜெமினி கணேசன் என்று இல்லாமல் கணேஷ் என்று இருப்பதையும் கவனியுங்கள்.
இந்த படத்தின் டைட்டில் லோகோ'வை பாருங்கள். காமிக்ஸ் கதைகளுக்கு உள்ளது போல வரையப் பட்டு இருக்கிறது. ஏனோ வைரஸ் எக்ஸ் (முத்து காமிக்ஸ் காரிகன் கதை) அட்டைப் படம் நினைவுக்கு வருகிறது.
ராணி இதழில் இந்த கதையை பற்றி வந்த விமர்சனத்தை படியுங்கள். வழமை போல சொத சொத விமர்சனம் தான்.
நாம் அனைவருக்கும் தெரிந்த பாலசந்தர் படமாகிய பாமா விஜயம் குறித்த விளம்பரம் இதோ:
இந்த விளம்பரத்தை நன்றாக பாருங்கள். போட்டோ வுடன் ஓவியர் ஒருவர் வரைந்த விளம்பரம் இது. வரைந்தவர் பெயர் தெரியவில்லை (இந்த விடயத்தில் வல்லவர் ஆகிய நண்பர் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன் - பார்க்கலாம்- மேற்கொண்டு விவரங்கள் தெரிந்தால் அப்டேட் செய்கிறேன்). இந்த படத்தை பற்றிய ராணி விமர்சனம் இதோ:
ஜெமினி கணேசன் அவர்கள் புகழ் பெற்ற பிறகு வந்த படம் இது. ஆனால் அவர் பெயர் இதில் இல்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் பெரிய சம்பவம் எதுவும் நடக்க வில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், இப்போது என்னடாவென்றால் தசாவதாரம் படத்தில் ஐந்து நிமிடம் கூட வராத ஒரு பாத்திரத்தில் நடித்த நெப்போலியன் அவர் பெயரையும் படத்தையும் போஸ்டரில் போடா வில்லை என்று பிரச்சினை செய்கிறார். என்ன கொடுமை சார் இது?
இந்த விளம்பரத்திலும் கூட ஸ்டுடியோ பெயர் இருப்பதை பாருங்கள். இந்த படத்தின் பெயர் கூட ரைமிங் ஆக இருக்கிறது. தானா'வுக்கு தானா.
வாத்தியார் நடித்து வந்த படங்களை பற்றிய விளம்பரங்களை இட வில்லை என்றால் குற்றமாகி விடும் என்பதால் இதோ தலைவர் நடித்த இரண்டு விளம்பரங்கள்:
ஈஸ்ட்மேன் கலர் என்பது தெரியும், ஜெமினி என்பது ஸ்டுடியோ ஆகவே இருக்க வேண்டும். தலைவர் தான் புரோடியுசர் போல இருக்கிறது.
அப்போதே இப்படி எல்லாம் ரமணா விஜயகாந்த் மாதிரி விவரங்களை எல்லாம் கொடுத்து விளம்பரம் செய்து இருக்கிறார்கள். இந்த படத்தை பாத்தா பெண்கள் விவரம் இதோ: அது எப்படி சார் தியேட்டர் வாசலில் நின்று எண்ணி இருப்பார்களோ?
ஹீரோ யார், நடிகை யார் என்று கூட குறிப்பிடாத இந்த ஜீவநாடி விளம்பரத்தை பாருங்கள்.
சாந்தி தியேட்டர் டீலக்ஸ் ஏர் கண்டீஷன் என்று கூறப் பட்டு இருக்கிறதை நன்றாக கவனியுங்கள். அந்த காலத்தில் இப்படி பட்ட வசதிகள் கொண்ட தியேட்டர்கள் மிகவும் குறைவு. அதனால் தான் இப்படி எல்லாம் விளம்பரத்திலேயே குறிப்பிட வேண்டி இருந்தது.
வாத்தியார் படம் பற்றி கூறிவிட்டு சூப்பர் ஸ்டார் படம் பற்றி கூறாவிட்டால் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் இதோ தலைவரின் மூன்று முகம் விளம்பரம்.
இப்போது ஒரு விடயம் புரிந்து விட்டது. ஜெமினி என்பது கலர் புராசசிங் நிலையம் ஆகும் என்பதே அது.
இந்த விளம்பரங்களில் முக்கால்வாசி எலேகன்ட் என்ற விளம்பர நிறுவனம் மூலமாக விநியோகம் செய்யப் பட்டு உள்ளது தெரிகிறது. அதைப் போலவே சில விளம்பரங்களில் அதனை டிசைன் செய்தவர் விவரமும் உள்ளதை பாருங்கள் (தீனதயாள், லக்ஷ்மி).
காமிக்ஸ் ஸ்டிரிப் பற்றிய பதிவு அடுத்த பதிவில் தொடரும்.
சிறப்பு பின்குறிப்பு:
காமிக்ஸ் பிரியன் said... லேட்டஸ்ட் நடிகர்கள் தனுஷ், சிம்பு விளம்பரங்கள் எங்கே? என்று கேட்ட இந்த கேள்விக்காக இந்த சிறப்பு பின்குறிப்பு. சிம்பு ரசிகர்கள் மன்னிக்கவும்.
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் நன்னாளில் நடிகர் சிம்பு நடித்த காளை என்ற படம் வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த படம் வெளிவந்த சிறிது நாளில் (பிப்ரவரி மாதம் முதல் வாரம்) மதுரை எடிஷன் தினகரன் செய்தி தாளில் இந்த விளம்பரம் வந்தது.
இந்த விளம்பரத்தில் ஹிட் என்ற வார்த்தைக்கு பதிலாக ஷிட் என்று தவறாக டைப் செய்து கொடுத்தார் அந்த லோக்கல் விநியோகஸ்தர். அதனையும் கவனிக்காமல் வெளியிட்டு விட்டனர். ஆனால், பாவம், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முரட்டுக் காளை படத்தையும் போகிற போக்கில் ஷிட் என்று கூறியது தான் கொடுமை.
படங்கள் மற்றும் கருத்து உதவி: தமிழ் காமிக்ஸ் உலகின் தலைவர்.