எதிரிகள் ஜாக்கிரதை என்று பழைய சினிமா விளம்பரங்கள் பற்றி என்னுடைய பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள், குறிப்பாக கருத்துக்களை தெரிவித்த நண்பர்களுக்கும்.நண்பர்களே, இந்த பதிவின் தலைப்பை பார்த்து யாரும் பயந்து விட வேண்டாம். இந்த காமிக்ஸ் ஸ்டிரிப் தொடர் மனிதர்களை மைய்யமாக கொண்ட ஒன்றாகும்.
ராணி வார இதழ் தினத்தந்தி ஆரம்பித்த காலம்தொட்டே வருவது நம்மில் பலருக்கும் தெரியும். இதனை "வாராந்தரி ராணி, குடும்ப இதழ்" என்றே அழைப்பார்கள். ஆரம்ப காலங்களில் இதன் எடிட்டிங் மிகவும் திறம்பட செய்யப் பட்டு சிறப்பாக வந்தது - அதாவது, தினத்தந்தி படிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் வந்தது. சிறுவர்களுக்கு என்று ஒரு சிறப்பு பகுதி, ஒவ்வொரு வாரமும் ஒரு தொடர் படக் கதை, சிறுவர் சிறுமியருக்கு போட்டிகள் என்று சிறுவர்கள் படிக்க இரண்டு முதல் மூன்று பக்கங்கள் ஒதுக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.
அதில் ஆரம்ப காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு காமிக் ஸ்டிரிப் தொடர் குரங்கு குசலா ஆகும். இது ஒரு சிறுவர் பகுதி ஸ்டிரிப் அல்ல. ஏனெனில் இதில் வந்த கருத்துக்கள் எல்லாமே அரசியல் மற்றும் சமூக சிந்தனைகளை மைய்யமாக கொண்டு அந்த சந்தர்ப்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை சார்ந்தே அமைந்து இருக்கும். மேலும் இவர்களின் மூலமாக ராணி நிர்வாகம் தங்களுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.
மேலே உள்ள படத்தில் இருக்கும் சம்பவம் 1967இல நடைபெற்றது. மிகவும் புகழ் பெற்று, பர பரப்பாக பேசப் பட்ட ஒரு சம்பவம் ஆகும். அதனை ஒட்டியே இந்த இதழின் குரங்கு குசலா அமைந்து இருந்தது. இந்த புகழ் பெற்ற காமிக்ஸ் ஸ்டிரிப் தொடரை வரைந்தவர் பெயர் வாலி ஆகும். இதற்கான கருத்தை அனேகமாக ஆசிரியர் நிர்ணயித்து இருக்க வேண்டும். சரியாக தெரியவில்லை.
அரசியல் கருத்துக்களை மட்டும் இல்லாமல் சமூக சூழ்நிலைகளையும் சுட்டிக்காட்ட குரங்கு குசலா தவறவில்லை. இந்த கால கட்டங்களில் தனிக் குடித்தனம் செல்வது மிகவும் பேஷனாக இருந்தது. அவ்வாறு செல்லும் இளைய தலைமுறையினர் சமைப்பதில் ஆரம்பித்து பல சிக்கல்களை அன்றாட வாழ்வில் சந்தித்ததை மைய்யமாக கொண்டே இந்த வார குரங்கு குசலா ஸ்டிரிப் அமைந்து இருந்தது.
நடுத்தர குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்ததால் குரங்கு குசலா அறுபதுகளில் அனைவரின் விருப்பமான பகுதியாக அமைந்ததில் வியப்பேதுமில்லை. அனைவரும் இந்த பகுதியை தேடித்பிடித்து படிப்பதை முதல் கடமையாக கொண்டு இருந்தனர்.
அதைப்போல பெரும்பாலான இதழ்களில் சிரிப்பு கொத்து என்று ஒரு பகுதி இருந்தது. அந்த பகுதியில் இந்த படத்தில் இருப்பதைப் போலவே ஆறு சிரிப்புகளை கொண்டு ஒரே விதமாக இருந்தது. இந்த பார்மட் கடைசி வரை மாறவே இல்லை. இதில் மற்றுமொரு விஷயம் என்னவென்றால் இந்த சிரிப்புகளை எழுதியவர் யார் என்றோ அல்லது இந்த படங்களை வரைந்தவர் யார் என்றோ விவரங்கள் கொடுக்கப்படவில்லை.
ஒவ்வொரு வாராந்தரி ராணி வார இதழிலும் தினத்தந்தி விளம்பரங்கள் வந்துக் கொண்டே இருந்தன. அந்த பழக்கம் இன்றுவரையிலும் மாறவே இல்லை. ஆரம்ப காலத்தில் வந்த விளம்பரங்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதோ ஒரு சாம்பிள். இந்த விளம்பரமே சுமார் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து வந்துக் கொண்டு இருந்ததாக நியாபகம்.
இந்த விளம்பரத்திற்கு பிறகு வந்த ஒரு விளம்பரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். இந்த விளம்பரத்தின் வாசகங்கள் அருமை தலைவர் விஜய டி. ராஜேந்தர் அவர்கள் எழுதியதோ என்று கூட நான் சில நேரங்களில் நினைப்பது உண்டு. சமீப கால வாசகர்களுக்கு உதாரணம் சொல்வது என்றால் தமிழ்நாட்டு டாரண்டினோ என்று அழைக்கப்படும் பேரரசு கூட இதனைப் போன்ற வாசகங்களை உபயோகிப்பார்.
எனக்கு தெரிந்த வரையில் நான்கு ஆண்டுகள் குரங்கு குசலா தொடர்ந்து வந்ததாக நியாபகம். அதற்க்கு பிறகு சில ஆண்டுகள் நாங்கள் வாராந்தரி ராணி, குடும்ப வார இதழை வாங்கவில்லை. அதனால் சரியாக தெரியவில்லை. மன்னிக்கவும்.
அடுத்த பதிவு - சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நடிக்கும் இயந்திரன் படத்திற்கும் இந்த பதிவுக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லாத ஒன்று. அதனால் திரையுலக நண்பர்கள் அதனை பற்றிய தொடர்பை தேட வேண்டாம்.